உணவு உட்கொள்வதற்கு முன்

#இந்துதர்மத்தின்_உண்ணும்_நெறி (அவசியம் படிக்கவேண்டியது)

இந்துதர்மத்தின் தர்மசாஸ்திரங்களும் ஆயுர்வேத நூலும் உண்ணும் நெறியைப் பற்றி தெளிவாக விளக்குகின்றன. அவற்றைப் பற்றி இப்போது காண்போம்.

உணவு உட்கொள்வதற்கு முன் தூய்மையாக குளித்துவிட வேண்டும். அவ்வாறு குளிக்கமுடியாவிட்டால் முடிந்தவரை கை, கால் மற்றும் முகம் ஆகியவற்றை சுத்தமாக கழுவ வேண்டும். இது உணவு உட்கொள்ள அமரும் முன்னர் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கங்கள் எனச் சொல்லப்படுகின்றன.

சுத்தமான ஓர் இடத்தில் அமர்ந்து உணவு உண்ணவேண்டும். உணவு உண்ணும் இடம் அல்லது அறை சுத்தமாகவும் அகமகிழ்வு தரக்கூடியதாகவும் இருக்கவேண்டும். உதாரணமாக ஒருவரின் வீட்டின் உணவு உண்ணும் அறை அழகிய பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கலாம். இதனால் உணவு உண்ணுபவருக்கு மகிழ்ச்சியான ஓர் உணர்வு ஏற்படும்.

கோபமாக இருக்கும்போதும் அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போதும் கடினமான உணவுகளை உட்கொள்வதை தவிர்த்துவிட வேண்டும். நம்முடைய உணர்வுகள் உடலில் பல்வேறு ஹார்மோன் சுரப்பிகளை தூண்டிவிடுகின்றன. கோபமாக இருக்கும்போதும் மன அழுத்தத்தில் இருக்கும்போதும் உணவு உட்கொள்வது பல்வேறு வகையான உடல்குறைகளை உருவாக்க வழிவகுக்கும். ஆதலால் இத்தகைய சூழ்நிலைகளில் எளிதில் செரிமாணமாகும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அடிக்கடி வெளியில் உண்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின் போது உணவகங்களிலும் தெருவோர கடைகளிலும் உணவு உட்கொள்ளலாம். ஆனால் அதையே வாடிக்கையாக கொள்வது ஆரோக்கியமற்ற செயலாகும். உணவகங்களில் உணவு பரிமாறுபவர்கள் பணத்தையும் லாபத்தையும் தான் பெரிதாக கருதுவார்களே தவிர ஒருவனின் ஆரோக்கியத்தையும் ஆத்ம திருப்தியையும் பற்றி அவர்கள் அக்கறை கொள்வதில்லை. திருப்தி என்பது நாம் எவ்வளவு உண்கிறோம் என்பதில் அமைவதில்லை; மாறாக எத்தகைய அன்புடையவர் கையினால் பரிமாறப்பட்ட உணவை உண்கிறோம் என்பதிலே அமைந்துள்ளது. உணவகங்களுக்குச் சென்று உண்பதால் நம் வயிறு நிறையலாம், ஆனால் மனம் நிறையாது. ஆகவே, அன்புடையவரின் கையால் பரிமாறப்பட்ட உணவை உண்பதையே நாம் விரும்பவேண்டும்.

உணவு உட்கொள்ளும் போது மூக்கின் வலதுபுற துவாரத்தில் இருந்து மூச்சுக்காற்று வெளிவருதல் நன்மை என்று கூறப்படுகின்றது. இதனால் உணவை செரிமாணம் செய்யும் அக்கினி தூண்டப்பட்டு உணவு விரைவாக செரிக்கப்படுகின்றது. இங்கு அக்கினி என்று குறிப்பிடப்படுவது கொளுந்துவிட்டும் எரியும் நெருப்பு அல்ல. ஒருவனின் உடலில் செரிமாணம் மற்றும் வளர்ச்சிதை மாறுபாடு ஆகிய இரண்டிற்கும் காரணமான ‘ஒன்று’ தான் ஆயுர்வேதத்தில் ‘அக்கினி’ என்றழைக்கப்படுகின்றது. வலது கைவிரலைக் கொண்டு மூக்கின் இடதுபுற துவாரத்தை அடைத்து வலதுபுறமாக சுவாசிப்பதன் மூலம் மூச்சுக்காற்று வலதுபுறமாக வெளிவர ஆரம்பிக்கும். இதுவே உண்பதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பிராணாயமம் (மூச்சுப்பயிற்சி) ஆகும்.

உணவு உட்கொள்வதற்கு முன்பு ஏதாவது ஒரு ஜீவனுக்கு உணவளிக்க வேண்டும். இன்றைய நிலையில் காக்கைக்கு உணவளிப்பது வழக்கமாகும். ஏனென்றால் காக்கை பரவலாகவும் எங்கும் காணப்படும் ஓர் உயிரினம் என்பதால் மக்கள் உண்பதற்கு முன் காக்கைக்கு உணவளிக்கின்றனர். ஆனால் உண்மையில் முந்தைய காலங்களில் மக்கள் உணவு உட்கொள்வதற்கு முன் ஏழை எளியவர்களுக்கும் தேவைப்படுவோர்களுக்கும் உணவளித்தப் பின்னரே உட்கொள்வார்கள். நாம் உணவு உட்கொள்வதற்கு முன் மற்றவர்களுக்கு உணவளிக்கவேண்டும் எனப்படுவது இயற்கைக்கு நாம் செய்யும் நன்றிகடனைப் போன்றதாகும். நமக்கு கிடைக்கும் உணவுகள் யாவும் இயற்கை நமக்கு அளித்ததே. உணவுகள் என்பது நமக்கு மட்டும் சொந்தமல்ல; உலகத்தின் எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது. உலகின் எல்லா உயிர்களும் இயற்கை அன்னையின் குழந்தைகளே. இவ்வாறு இயற்கை அன்னையின் மற்ற குழந்தைகளுக்கு உணவளிப்பதன் மூலமாக நாம் இயற்கைக்கு நன்றிகடன் செய்கிறோம். நம்முடைய நன்றிகடனை செலுத்திய பின்னர் நாம் உணவு உட்கொள்வது உன்னதமான செயலாக அமைந்துள்ளது.

உணவை உட்கொள்ள துவங்கும் முன்னர் நான்கு பேருக்கு நாம் நன்றி கூறவேண்டும். முதலாவது இறைவன், இரண்டாவது இயற்கை, மூன்றாவது விவசாயி, நான்காவது உணவை அன்புடன் சமைத்துக் கொடுத்தவர். நாம் ஒரு வேளை திருப்தியாக உணவு உட்கொள்வதற்காக பலர் பாடுபட்டிருக்கலாம். பலரின் தியாகத்தால் அமைந்ததே நம்முடைய ஒருவேளை உணவு என்பதை நாம் நன்கு உணர்ந்திருப்போம். அதற்காக நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும். நமக்கு உணவு அளிக்க பாடுபட்டவர்களின் வாழ்க்கை என்றும் வளமாக இருக்கவும் இயற்கை அன்னையின் வற்றாத வளம் என்றும் எல்லா உயிர்களுக்கும் உணவளிக்கவும் இறைவனை வேண்டிகொள்ள வேண்டும். மேலும், நமக்கு உணவை சமைத்துக் கொடுத்தவருக்கு நன்றி கூறி அவரைப் பாராட்டவேண்டும். அவரைக் குறை சொல்வதையும் கேலி செய்வதையும் தவிர்த்துவிட வேண்டும்.

உணவு உட்கொள்ளும் போது நம்முடைய முழு கவனமும் உணவில் தான் இருக்கவேண்டும். தொலைக்காட்சி, கைப்பேசி அல்லது மடிக்கணினி ஆகியவற்றில் கவனம் செலுத்திக் கொண்டு உணவை உட்கொள்வது ஆரோக்கியமற்ற மற்றும் ஒழுங்கற்ற செயலாகும். உணவு உட்கொள்ளும் போது அதிகமாகப் பேசக் கூடாது. அமைதியாக அமர்ந்து உணவை உண்டுமுடித்தப் பின்னர் பேச்சுவார்த்தைகளைத் தொடரலாம். மிகவும் மெதுவாகவோ அல்லது மிகவும் விரைவாகவோ சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். கையால் உணவு உட்கொள்வது ஊக்குவிக்கப்படுகின்றது. ஆனால், இதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. வலது கையால் தான் உணவு உட்கொள்ளவேண்டும். வலதுகை விரல்களில் அதிகபட்சம் நான்கில் மூன்று பங்கு வரை தான் உணவில் படவேண்டும். உள்ளங்கை வரை உணவு படும்படி உட்கொள்வது ஒழுங்கற்ற செயலாகும். உணவை சாப்பிட்டு முடிக்காமல் எழுந்து நடப்பதோ அல்லது எச்சில் கையுடன் உலாவுவதோ தவிர்க்கப்பட வேண்டியவை. இவை உணவு உட்கொள்ளும் நெறிமுறைகளாகும்.

இவை இந்துதர்மத்தில் ஒவ்வொரு மனிதரும் உணவு உட்கொள்வதற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய நெறிகளாக அமைந்துள்ளன.

14212028_1117775331604272_5433746544625257486_n.jpg

Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s