திடுக்கிட வைக்கும் `டெக்னாலஜி’ பயங்கரம்

Sivasankaran Sundaresan with Rajagopal Srinivasan.

திடுக்கிட வைக்கும் `டெக்னாலஜி’ பயங்கரம்

‘‘சென்னையைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தலைவிக்கு, தெரியாத எண்ணில் இருந்து தொடர் மொபைல் அழைப்பு. ‘நீங்க இன்னிக்கு ரெட் கலர் புடவையில சூப்பரா இருந்தீங்க’, ‘வெள்ளை சுடிதாரில் நீங்க தேவதை மாதிரி இருந்தீங்க’, ‘இன்னிக்கு ஏன் டல்லா இருக்கீங்க?’, ‘ஒருநாள்கூட உங்களைப் பார்க்காம என்னால் இருக்க முடியல’ என்று அந்த எண்ணில் வழிந்த ஆண் குரல் இவர் நிம்மதியைப் பறிக்க, கணவரிடம் விஷயத்தைச் சொல்லி, தம்பதி காவல் நிலையம் சென்றனர். சைபர் க்ரைம் செல்லில், அவர்கள். குழந்தை படிக்கும் பள்ளியின் அட்டெண்டர் அவன் என்பது தெரிய வந்தது. குற்றவாளி கைதானான். தொழில்நுட்ப வளர்ச்சியால், பெண்கள் கண்ணுக்கே தெரியாத காமக் கள்வர்களும் எளிதில் தொடர்புகொள்ளும் வெளிக்கு வருகிறார்கள்!’’

– இந்த விஷயத்தை நம்மிடம் பகிர்ந்தவர், ‘நேஷனல் சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்ஸ்’ எனும் தனியார் நிறுவனத்தின் கூடுதல் பொது இயக்குநர் அமர் பிரசாத் ரெட்டி. இங்கே, தொழில்நுட்ப வளர்ச்சி பெண்களுக்கு ஏற்படுத்தும் பாதுகாப்பின்மையை, இன்னும் பல உண்மைகளுடனும், உதாரணங்களுடனும் விளக்குகிறார். ஒவ்வொன்றும் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டிய அனுபவம்!

எங்கே பிரைவஸி ?

‘‘நம் எண்ணில் இருந்து இன்னொரு எண்ணுக்குப் பேசும் அழைப்போ, அனுப்பும் குறுஞ்செய்தியோ, பகிரும் புகைப்படமோ… நமக்கும் அந்த நபருக்கும் இடையே மட்டுமேயான தகவல் தொடர்பு என்று நினைத்தால், அது முட்டாள்தனம். நம் எண்ணில் இருந்து மற்
றொரு எண்ணுக்குத் தொடர்புகொள்ளும் செய்தி, முதலில் சம்பந்தப்பட்ட நெட்வொர்க்கின் தரவுதளத்துக்குச் செல்கிறது. அங்கிருந்துதான் அது, அந்த எண்ணுக்குச் செல்கிறது. அந்த நெட்வொர்க்கில் பணிபுரியும் நபர் நினைத்தால், அதை உலகின் கண்களுக்குத் தெரியச் செய்யலாம். அழைப்பு, மெசேஜ், சாட் போன்ற தன் வாடிக்கையாளர்களின் நெட்வொர்க் தகவல்களை, அரசாங்கம் கேட்டால் ஒழிய, தனியாருக்கு எந்த நெட்வொர்க் நிறுவனமும் வழங்கக்கூடாது என்பதுதான் விதி. ஆனால், தவறு செய்ய நினைப்பவர்கள் யாரும் விதி
முறைகளைப் பின்பற்றுவதில்லை.

தொழில்நுட்பத் தகவல் திருட்டில் தடைசெய்யப்பட்ட கருவிகள் இன்று கள்ளப் புழக்கத்துக்கு வந்துவிட்டன. இதன் மூலம், இரு மொபைல் எண்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகள் தொடங்கி, அந்த மொபைல்களில் உள்ள தகவல்கள் வரை அனைத்தையும் எளிதாகத் திருட முடியும். இப்போது சொல்லுங்கள்… பிரைவஸி என்ற ஒன்று இங்கிருக்கிறதா என்ன?!

ஹைடெக் திருட்டு!

‘கீ -லாக்கர்’ என்று சொல்லக்கூடிய மிக மிகச் சிறிய வைஃபை டிவைஸ் ஒன்றை, துப்புரவுப் பணியாளர் மூலம் ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் சி.இ.ஓ கணினியின் கீ-போர்டில் பொருத்திவிட்டார்கள் மோசடி நபர்கள். மறுநாள் காலை சி.இ.ஓ தன் கணினியை ஆன் செய்ய, அந்த அலுவலகத்துக்கு வெளியே ஒரு காருக்குள் இருந்தபடி, அவர் தன் கணினியில் டைப் செய்யும் ஒவ்வொன்றையும் தாங்கள் பொருத்திய வைஃபை டிவைஸ் உதவியோடு இங்கே தங்கள் கணினியில் பார்த்தது அந்த திருட்டுக் கும்பல். உடனே அவரது தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, ‘சார்… உங்க நெட் பேங்கிங் பாஸ்வேர்டை உடனே மாத்திடுங்க… ஃபார் செக்யூரிட்டி பர்பஸ்’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்கள். அவரும் உடனே வங்கி வலைதளப் பக்கத்துக்குச் சென்று யூசர்நேம், பழைய பாஸ்வேர்டு, புதிய பாஸ்வேர்டு போன்றவற்றை டைப் செய்ய.. அது அப்படியே இவர்களது கணினியில் தெரிய… அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்த அனைத்துப் பணத்தையும் சுருட்டிக்கொண்டு தப்பிவிட்டது திருட்டுக் கும்பல். ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ-வின் செக்யூரிட்டியே இந்த நிலையில் இருக்கும் போது, நம் கணினியின் செக்யூரிட்டியை என்ன வென்று சொல்ல?!

`வலை’ குழந்தைகள்!

இன்று குழந்தைகளுக்காக ஆன்லைனில் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. கிஃப்ட் காம்படிஷன், மதர் சர்ப்ரைஸ் கிஃப்ட் போன்ற அந்தப் போட்டிகளில் ஈர்க்கப்பட்டு பரிசுக்காக விளையாடும் குழந்தைகள் மூலமாகவே, அவர்கள் நண்பர்களையும் அங்கு வரவழைக்கிறார்கள். ‘அப்பா, அம்மா விவரங்கள், தொடர்பு எண்கள், ஸ்கூல், க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ், ஃப்ரீ டைம் ஹாபி, அவுட்டிங்’ போன்ற தகவல்களை கேட்டுப் பெற்று, அவர்கள் பெற்றோரின் தொழில் சம்பந்தமான பிசினஸ் விளம்பரங்களை அவர்களுக்கு அனுப்புவது தொடங்கி, குழந்தை கடத்தல் வரை திட்டமிடப்படுகிறது என்பது அதிர்ச்சியான உண்மை.

நம் பிள்ளைகளை இணையத்தில் இருந்தும், இணையத்தால் விஷமாகிப் போன சகாக்களிடம் இருந்தும் காப்பாற்ற வேண்டிய நம் பொறுப்பைத்தான் அதிக மாக்கிக்கொள்ள வேண்டும்.

எச்சரித்தாலும்…

ஒரு கல்லூரிப் பெண்ணின் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் 4 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ‘இவர்கள் அனைவரையும் உனக்குத் தெரியுமா’ என்றால், அசட்டை யாக தோளை உலுக்குகிறாள். தான் நான்காயிரம் பேரால் கண்காணிக்கப்படுவதில், அதில் உள்ள அயோக்கியர் களின் எண்ணிக்கையை, அவர்கள் அவளுக்கு விளைவிக்கக்கூடிய ஆபத்தையெல்லாம் அவள் சிந்திக்கவில்லை. ‘ஜஸ்ட் ஃபார் ஃபன்’ என்கிறாள்… ஒருநாள் வீட்டில் யாருமில்லாதபோது, ‘சிங்கிள் அட் ஹோம்…’ என்று ஸ்டேட்டஸ் தட்டிய ஒரு பெண்ணை, அவள் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் இருந்த ஓர் அந்நியன் சீரழித்த கதை தெரியாமல்.

ஆளே இல்லை!

ஃபேஸ்புக்கில் ஒரு பெண்ணைப் பற்றிய ஆபாச, அவதூறு வீடியோ பரவினால், அதை உடனடியாகத் தடுக்க புகார் அளிக்க, இந்தியாவில் ஒரு நபரைக்கூட ஃபேஸ்புக் நிறுவனம் நியமிக்கவில்லை. அயர்லாந்தில் உள்ள ஃபேஸ்புக் மையத்தில்தான் புகார் அளிக்க முடியும். அதற்கு முன்பு நம் நாட்டு நீதிமன்றத்தில் ஆர்டர் வாங்க வேண்டும். அதை அவர்கள் நாட்டு நீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டும். இதையெல்லாம் செய்துமுடிக்க குறைந்தது 15 நாட்கள் ஆகும். சில நிமிடங்களில் பல்லாயிரம், பல லட்சம் ஷேர்களை நிகழ்த்தும் நம் ‘நல்லவர்கள்’ தேசத்தில், சம்பந்தப்பட்ட பெண்ணின் வாழ்க்கையே அந்த வீடியோ வால் முடங்கிவிடும். இதை எல்லாம் உத்தேசித்துதான், ‘எங்கள் நாட்டுக்குள் ஃபேஸ்புக்கே வரக்கூடாது’ என்ற முடிவெடுத்த சீனா, இன்றுவரை ஃபேஸ்புக்கே இல்லாத நாடாக இருக்கிறது.

ஆபாச வீடியோக்கள்… அரசின் நடவடிக்கை என்ன?

வலைதளங்களைவிட, செல்போனில் ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்கள் தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். அரசு நினைத்தால், நெட்வொர்க் நிறுவனங்களின் கடி வாளத்தை இறக்கி, ஆபாச வீடியோக்கள் பரப்பப்படுவதற்கு தடை விதிக்கலாம், தடுக்கலாம். ஆனால், அதிக மெமரி கொண்ட ஆபாச வீடியோக்களை டவுன்லோடு செய்வதன் மூலம், அதிகக் கட்டணம் வசூலிக்கும் நெட்வொர்க் நிறுவனங்கள், அதில் ஒரு பங்கை அரசுக்கும் கொடுத்து அதை ‘ஆஃப்’ மோடில் வைத்திருக்கின்றன. ஆக, நடக்கும் குற்றங்களுக்கு எல்லாம் அரசும் மறைமுகமாக துணை போகிறது என்பதே உண்மை.”

போதிய வசதிகள் இல்லாத சைபர் க்ரைம்!

இணைய அட்டூழியங்களுக்குத் தண்டனை கொடுக்க காவல்துறையில் சைபர் க்ரைம் எனும் பிரிவு இருக்கிறது. ஆனால், அந்தத் தொழில்நுட்ப விவரங்கள் தெரிந்தவர்கள் இங்கே போதுமான அளவில் பணியமர்த்தப்படுவதில்லை. 7 கோடி மக்கள் இருக்கும் தமிழகத்தில் தற்போது ஆயிரத்தில் மட்டும் சைபர் க்ரைம் போலீஸார் இருந்தால், பிரச்னைகளை எப்படி விரைந்து முடிக்க முடியும்?

ஆக, சமூக வலைதளங்களுக்கான கடிவாளத்தின் சாத்தியத்தன்மை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை. பாதுகாப்பு எல்லைக்குள் நம்மை நிலைநிறுத்தும் பொறுப்பும், நம் கைகளிலேயே! எனவே, டெக்னாலஜியை மிக மிக மிகக் கவனமாகப் பயன்படுத்துவதுதான்… நமக்கிருக்கும் ஒரே பாதுகாப்பு!

பாதுகாப்பு டிப்ஸ்!

இ-மெயில் பாஸ்வேர்டு, டெபிட் கார்டு பாஸ்வேர்டு போன்றவற்றை பொது இடத்தில் அலைபேசியில் சொல்வது, செல்லில், மெயிலில் பதிவது வேண்டாம். எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் சிக்கலான பாஸ்வேர்டாக வைப்பதுடன், அடிக்கடி அதை மாற்ற வேண்டும்.

மொபைலில் தேவையற்ற ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டாம். சில ஆப்ஸ்கள் மிக எளிதில் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மொபைலில் உள்ள தகவல்களைத் திருடி அனுப்பும்.

புகைப்படங்கள் மார்ஃபிங்கால் சீரழிக்கப்படலாம் என்பதால், சமூக வலைதளங்களில் புகைப்படங் களை பதியாதீர்கள். பெர்சனல் விஷயங்கள் பற்றிய ஸ்டேட்டஸ் பதியாதீர்கள்!

மால், தியேட்டர், பொருட்காட்சி போன்ற இடங்களில், ‘குலுக்கல் பரிசு’ என்று உங்களைப் பற்றிய தகவல்களைப் பூர்த்தி செய்யச் சொல்லும்போது, தவிர்த்துவிடுங்கள்.

ஹோட்டல், மால், தியேட்டர் என்று இலவச வைஃபை இணைப்பு உள்ள இடங்களில் மிகக் கவனமாக இருங்கள். இதுபோன்ற இடங்களில் வைஃபையை ஆன் செய்தாலே போதும், உங்கள் கைபேசியில் உள்ள தகவல்கள், புகைப்படங்கள் அனைத்தும் திருடப்படலாம்.

செல்போனை சர்வீஸுக்குக் கொடுக்கும்போது மெமரி கார்டு நீக்கி, முக்கிய விவரங்களை அழித்துக் கொடுங்கள்.

 

Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s