வளர்ச்சியா வீக்கமா?

மண்வாசனை
————————-
என்ன பாண்டியன், இவ்வளவு வருஷம் ஏற்று கொள்ளாமல் இருந்த ப்ரோமோஷனை ஏத்துக்கிட்டீங்களா. .கங்கிராஜுலேஷன்ஸ்!!

இல்லீங்க, பேமிலியும் பசங்களும் சென்னைக்கு போகலாம்னு பிரியப்பட்டாங்க, அதான் சரின்னு சொல்லிட்டேன்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் பாண்டியனுடனான சம்பாஷணை நினைவுக்கு வந்தது.பல வருட வாழ்க்கைக்கு பிறகு பணி நிமித்தமாக மதுரையிலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தார். சில வருடங்கள் இங்கு இருக்கப்போவதாகவும் பிறகு மதுரைக்கே செல்லப்போவதாகவும் கூறினார். ஒளிவு மறைவின்றி மனம் விட்டு பேசக்கூடிய நண்பர்கள் ஒரு சிலரே வாழ்க்கையில் கிடைப்பார்கள். அதில் பாண்டியனும் ஒருவர். நிறைய விவாதிப்போம், பேசுவோம். நீங்க என்ன நினைக்கறீங்க என்று கேட்டார்.

என் அனுபவத்தில் பார்த்த மாத்திரத்தில் சொல்கிறேன்..சென்னையை போன்ற பெருநகரங்களில் உள்ள வாழ்க்கை தரத்தை விட அடுத்த நிலையில் உள்ள மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் வாழ்க்கை தரம் சிறப்பாகவே இருக்கிறது என்பேன். சென்னை மனிதர்கள் மோசம் என்பது போலவும் மற்ற ஊர்கள் மனிதர்கள் வெள்ளந்தியானவர்கள் என்று வகைப்படுத்தி பார்ப்பது எனக்கு ஏற்புடையது அல்ல .அடிப்படை குணாதிசயங்கள் எல்லா இடத்திலும் ஒன்று தான்.

பெரு நகரங்களில் நாம் நாமாக இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. பாண்டியா, நீ எவ்வளவு தான் எளிமையான குணம் கொண்டவனானாலும் சுற்றம், நண்பர்கள், குடும்பம் எல்லாம் சேர்ந்து நகர வாழ்க்கையில் பெரும் நெருக்கடியை கொடுத்து விடும்.உன் வாழ்க்கையை நீ முடிவு செய்வது அத்தனை சுலபம் அல்ல. நாம் குடியிருக்கும் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் தினந்தோறும் போய்வர மூன்று மணி நேரமாவது தேவைப்படும், அலுவலகத்திற்கு அருகே குடியிருப்பதற்கு கட்டுபடியாகாது. சாதாரண கூட்டத்தில் மூன்று ருபாய் கொடுத்து அரை மணியில் நீ பஸ்ஸில் ஒரே சீட்டில் உட்கார்ந்து கொண்டு காற்றை அனுபவித்து இளையராஜா பாட்டு கேட்டுக்கொண்டு ஆபீஸ் போய் வந்திருப்பாய். முதலில் பஸ்ஸிலோ , எலெட்ரிக் ட்ரைனிலோ கூட்டத்திற்கு பழக்கப்படுத்தி கொள்ளவே நேரம் பிடிக்கும். குழந்தைகளை, ஏதோ ஒரு பள்ளி என்று சேர்க்க முடியாது. சில பள்ளிகளுக்கென்று ஒரு ப்ராண்ட் இருக்கிறது. அக்கம்பக்கத்தில் பிள்ளைகள் எல்லாம் இந்த பள்ளிகளில் ஏதோ ஒன்றுக்கு தான் போய் வரும்..இந்த பள்ளிகளில் அனுமதிக்கு பெரிய மனிதர்களின் சிபாரிசோ, பணமோ கண்டிப்பாக தேவைப்படும். இதை விட சிறந்த பள்ளிகளும் ஆசிரியர்களும் மதுரை, திருச்சி போன்ற ஊர்களில் உண்டு. என்ன சென்னையில் உள்ள மாணவர்கள் ஏதோ இங்கிலீஷ் நன்றாக பேசுவது போல தோன்றும், இருப்பினும் அது உண்மையல்ல. அங்கிருந்தும் ஐ ஐ டிக்கும்,
ஐ ஐ எம்மிற்கும் போனவர்கள் இருக்கிறார்கள். இண்டெர்நெட் யுகத்தில் இடம் ஒரு பொருளா என்ன?

அருகாமையில் நேர்மையான திறமையுள்ள டாக்டர்களை தேடி தெரிந்து கொள்ளவேண்டும்.. திறமையானவராக இருந்தாலும் ஒரு முறை பார்த்தால் மருந்து உள்பட ஆயிரம் ரூபாய் செலவு நிச்சயம். இத்தனை டெஸ்டுகள் தேவை தானா என்று அவரிடம் கேட்க முடியாது, ஏனெனில் யாரும் அவரை கேட்க மாட்டார்கள்.
எந்த பொருளின் விலையேற்றத்தையுமே நகரத்தில் கேள்வி கேட்கும் கலாச்சாரம் மிக குறைவு, ஏனெனில் எந்த விலைக்கும் காசு கொடுத்து வாங்க ஆட்கள் இங்கு இருப்பார்கள். கண் முன்னாலேயே, என்றோ வந்து பிடித்து வைத்த மழை தண்ணீரை ஒரு மினெரல் வாட்டர் கேனில் கலந்து சீல் செய்து அறுபது ரூபாய்க்கு விற்பார்கள். எல்லோரும் என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா என்று புலம்புவோம், முகநூலில் போஸ்டிங் போடுவோம் அவ்வளவு தான். டியூஷன் செண்டர்களை தேடி நீ படையெடுக்க வேண்டும். ஐ ஐ டி- ஜெ ஈ ஈ,நீட், எம் சேட் என்று புது புது வார்த்தைகளை சொல்லி பயமுறுத்தி மேலும் பணம் பறிப்பார்கள். நம் குழந்தை பின் தங்கி விடுமோ என்ற அச்சத்தில் நீ ஓடி கொண்டே இருப்பாய்.ஊரில் மூன்று ருபாய் டிக்கெட்டில் அரைமணியில் ஆபீஸ் போய் வந்த நீ கடன் வாங்கி ஒரு சிறிய காரை வாங்கி கப்பம் கட்டிக்கொண்டிருப்பாய். அதற்கு பார்க்கிங் இடம் கிடைக்காமல் தெருக்களில் நிறுத்தி வைத்திருப்பாய். என்ன தான் கார் இருந்தாலும் ஜன நெரிசலில் வீடு திரும்புவதற்கு இரவு ஒன்பது மணியாவது ஆகிவிடும். ஊரில் நீ ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து உன் மனைவியுடன் ஒரு நடைபயிற்சியோடு மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டு வருவாய். இங்கு எல்லா இடத்திலும் பழமுதிர்சோலை என்று தான் போர்டு வைத்திருப்பார்கள். கீரையும், காய்கறிகளும் பழங்களும் மேல் பூச்சிற்கு ரசாயனம் தடவி தண்ணீர் தெளித்து அப்போதே விளைந்தது போல ஒரு தோற்றத்தை உண்டு பண்ணுவார்கள்..ஐம்பது ரூபாய்க்கு சினிமா பார்த்துக்கொண்டிருந்த நீ ஐநூறு ரூபாய்க்கு பாப்கார்ன் தின்று கொண்டு ஒரு படம் பார்த்துவிட்டு வருவாய். முன்பு குடும்பத்தின் எல்லா சுப அசுப காரியங்களுக்கும் போய் வந்திருப்பாய், இப்போதெல்லாம் சிலவற்றை உதறி ‘நேரமே இல்லைங்க’, லீவ் கிடைக்கலங்க என்று காரணத்தை தேடுவாய். பொருளாதார தேவையின் உந்துதலில் உன் மனைவியும் ஒரு வேலைக்கு செல்ல தொடங்குவாள்.. பிள்ளைகள் பள்ளியிலிருந்து வந்தால் எதிர் வீட்டிலோ அல்லது ஏதோ ஒரு காப்பகத்திலோ சில மணிநேரங்களுக்கு பணம் கட்டி தங்கவைப்பாய். உன் குழந்தைகளுக்கு நகரத்தின் மால்களையும், மெட்ரோ ரயில்களையும் பார்த்த பரவசத்தில் வாழ்க்கையில் ஏதோ சாதித்ததை போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியாது, அது அவர்கள் வயது. நீயும் உன் க்ரெடிட் கார்டினை தேய்க்க தொடங்குவாய்.சென்னையோ, பெங்களூரோ.வேலைக்கென்று எப்படியும் நகரங்களுக்கு தான் போயாக வேண்டும், அங்கு தான் வேலை கிடைக்கும்.. இன்னும் ஒரு சௌகரியமும் உண்டு, பெரும் வியாதி ஏதேனும் வந்துவிட்டால் மற்ற நகரங்களை காட்டிலும் சிறந்த மருத்துவ வசதி உள்ளபடியால் எப்படியேனும் காப்பாற்றி விடுவார்கள். இருப்பினும் நகரத்தில் உள்ள அநேக மனிதர்களும் மற்றவர்கள் பார்வைக்கேற்றபடியே வாழ்வதால் ஏமாற்றங்களையே அதிகம் சந்திக்கிறார்கள். அது மன அழுத்தத்தை ஏற்றி பல உடல் உபாதைகளை உண்டுபண்ணுகிறது.
.
ஊரில் குறைவான ஜனம், நல்ல காற்று, குடிநீர், பரபரப்பற்ற எளிமையான வாழ்க்கை, கட்டுப்பாடும் மண்ணின் பாரம்பரியமும் ஒருங்கிணைந்த வாழ்க்கைமுறை , குடும்பத்துடன் செலவு செய்ய தரமான நேரம்..பணத்தின் அருமை தெரிந்து பொருள் வாங்கும் போக்கு, சுற்றம் மகிழ வாழ்வதால் உடல் ஆரோக்கியமாகவே இருப்பாய். இது ஏதோ சென்னைக்கும் மதுரைக்கும் இடையே உள்ள இடைவெளி என்று நினைக்காதே .. சென்னைக்கும் அமெரிக்கா மற்றும் லண்டனுக்கும் இதே தான். அவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள், ஆனாலும் அவர்களிடம் ஏதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வு வெளிப்படும்.. அது நம் மண்ணின் வாசனை..

அது சரி, இவ்வளவு சொல்றீங்களே, நீங்க ஏன் ஊருக்கு திரும்பி போகவில்லை ? அது தானே உன் கேள்வி.

முடியவில்லை.. எது சுகமென்று உன்னிடம் சொல்லிக்கொண்டிருந்தேனோ அவை எனக்கு இப்போதெல்லாம் கஷ்டமாக தெரிகிறது. ஊருக்கு போனால் இரண்டு நாட்களுக்கு மேல் இருக்க முடிவதில்லை.வசதிகளுக்கு அடிமையாகிவிட்டேன் என்று நினைத்து கொண்டு சமாதானம் செய்து கொள்கிறேன். வடிவேலுவின் மதுரை “சட்னிக்கு தானே பேமசு” காமெடி பார்த்திருக்கிறாயா?. அதில் எச்சரிக்கை செய்யும் சிறுவன் போல் சொல்லி கொண்டிருக்கிறேன்.

‘டிங்’ என்று வாட்சப் சிணுங்க செல்போனை பார்த்தேன். ‘அவசியம் குடும்பத்துடன் வரவும், ஜமீன் பல்லாவரத்தில் புதுமனை புகுவிழா’ ஷண்முக பாண்டியன் அழைப்பிதழ் அனுப்பியிருந்தான் ..

வளர்ச்சியா வீக்கமா? எனக்கு சொல்ல தெரியவில்லை.

வாழ்த்துக்கள் என்று பதில் கொடுத்தேன்

Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s