சுவை பட வாழ்
————————-
பொதுவாகவே பிராமணர்களுக்கு நாக்கு நீளம், நான் சாப்பாட்டை சொன்னேன்..அதுவும் என் போன்ற திருச்சிக்காரர்களுக்கு ருசி உள்நாக்குவரை தெரியும். பதினஞ்சு நாளா மஹாளய பக்ஷம் ஒண்ணும் முடியலையா, இன்னிக்கு ஒரு நாள் தஞ்சாவூர் மெஸ்ல சாப்பிடட்டுமான்னு,செந்தில் அளவுக்கு அப்பாவியா கேட்டவுடனே, நவராத்திரி இல்லையான்னு ஒரு குரல் வந்தாலும், அது ஸ்திரீகளுக்கு தானேன்னு, ஒரு வாய்தா வாங்க, அவா பூஜைல பிஸியா இருக்கற அவசரத்துல ஒரு பிக்கல் விட்டதுங்கற ரேஞ்சுல பெர்மிஷன் கிராண்டெட். ஒரே ஒரு நெய் தோசை தாம்ப்பா, நம்புங்க டூட். எனக்கு எங்க ஊர் ஹோட்டல்கள் ஞாபகம் வந்துடுத்து..

ஸ்ரீரங்கம்காரர்களுக்கு ராஜகோபுரத்துக்கு அப்புறம், அதிகமாக தெரிஞ்ச இடம் வெங்கடேசபவன் தான். ரங்கா ரங்கா கோபுரத்துக்கு முன்னாடி உள்ள சின்ன கோபுரத்து வாசல்ல நாச்சிமுத்து ஜவுளிக்கடை, அதற்கு எதிர்த்தாற்போல் தான் வெங்கடேச பவன். குறுக்கும் நெடுக்குமாய் நூறு சதுரஅடி தான் ஹோட்டலே. ஒரே நேரத்தில ஏழெட்டு பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். வெளிச்சம் இல்லாத பழைய கால கோபுர கட்டிடங்கள்.இருக்கும் ஒரே சாளரத்தின் வழியே சன்னமாய் வரும் வெளிச்சம், எவ்வளவு சுத்தினாலும், காற்றே வராத ஒரு அழுக்கு சீலிங் ஃபேன் மேலே.அண்ணன் தம்பிகள் ஆறு பேரோ ஏழு பேரோ தெரியாது, முதலாளிகள் முதல் சர்வர்கள் வரை எல்லாம் அவர்களே. என் வயதிற்கு எல்லாருமே பெரியவர்கள் தான்,கடைசி ஒருவரை தவிர..தெற்கு சித்திரை வீதியில் ஒரு பெரிய வீடு அவர்களது. வெங்கடேசபவன், காலை ஏழுமணி முதல் எட்டரை வரை தான் இயங்கும். எட்டு மணிக்கே பாதி காலியாகி சட்னியோ சாம்பாரோ மட்டும் தான் இருக்கும். அதே போல மதியம் இரண்டரைக்கு ஆரம்பிச்சா நாலறைக்கு எல்லாம் காலியாகி விடும். வயிறு முழுவதும் காலியாகவைத்து கொண்டுதான் அங்கு போவோம்..கார்த்தாலே ரவா பொங்கல், பூரி மசால்.மதியத்துக்கு சுட சுட ஒரு ஸ்வீட் உண்டு.எல்லா நேரங்களிலும் கிடைக்கக்கூடியது நெய் தோசை, சாம்பார் வடை. இது அவர்கள் ஸ்பெஷல்..குறிப்பாக சாம்பார் வடை நன்றாக ஊறி அப்படி தொட்டால் விண்டு வரும்..அதுவும் அந்த சாம்பார் இருக்கே, அங்கே அநேக நேரங்களில். கொத்தமல்லிவிரை அரைச்சு விட்ட சாம்பார் .புதன்கிழமை மட்டும் கடப்பா. அதுக்குன்னே ஒரு கூட்டம் உண்டு. நாமெல்லாம் ஆர்டர் பண்ணுவதற்கு முன்னாடியே இலையில் அசோகா அல்வா வைத்து இரண்டு சாம்பார் வடை வைத்து விடுவார்கள்.

“மாமா ஸ்வீட் சாப்பிடக்கூடாது, சுகர் மாமா”

“போடா, ஒரு நாள் சாப்பிட்டா ஒண்ணும் ஆயிடாது. என்னிக்கோ ஒரு நாள் வந்துருக்க. எந்தூர்ல இருக்க இப்ப?”

அமெரிக்காவுல இருக்கேன்.

ஈஸ்ட் கோஸ்ட்டா, வெஸ்ட்டா?

நியூயார்க்ல இருக்கேன் மாமா..

அப்படியா, நேத்திக்கு தான் உப்பிலி வந்திருந்தான் , கலிபோர்னியாவில் இருக்கேன்னு சொன்னான். நேத்திக்கு இங்கே அக்கார அடிசில்

அடடா, நேத்திக்கே வந்துருக்கலாமே.

அதனாலென்ன, அடுத்த வாரம் மறுபடியும் போடறேன். இருப்பியோல்யோ?

இப்படி உரிமையோடு பேசிக்கொண்டிருப்பவர் வாசலை பார்த்து, ‘ டேய் சடகோபா, ஸ்கோர் என்னடா என்பார்..

தொண்ணூத்தி ஒண்ணுக்கு ஆறு விக்கட் போயிடுத்து..

கபில் இருக்கானா?

நம்மளவன பார்த்தேளா.முதல் ஓவரே சுத்தணுமா?.ஒரு ஓவர் நிக்கப்டாதா? தத்யோன்னம்..அவசர குடுக்கை.. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்துக்கு தான் அவ்வளவு அர்ச்சனையும்.

ஸ்வாமின்னு, இங்கே இன்னொரு கரண்டி அல்வா சாதியும். பக்கத்து டேபிளில் எண்பது வயது கிருஷ்ணய்யங்கார் கேட்டுக்கொண்டிருப்பார். அவருக்கு சர்க்கரை முன்னூறுக்கும் குறையாமல் இருக்கும். வீட்டில் மாட்டுப்பெண் நிர்வாகத்தில் பெரிதாக ஒன்றும் கிடைக்காத ஏக்கத்தில் வெங்கடேசபவன் தான் அவரை போன்றவர்களுக்கு வடிகால்..

நாம் சாப்பிட்ட இலையை நாமே தான் எடுத்து குப்பைத்தொட்டியில் போடவேண்டும்.இருவர் வயிறு முட்ட சாப்பிட்டால் நாற்பது ரூபாய் என்று ஒரு சிறிய ஸ்லிப்பில் எழுதி கொடுப்பார்கள்..

ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளால் திருவானைக்காவில் பார்த்தசாரதி விலாஸ் அதிக புகழ் பெற்று விட்டது. முன்னமே இதுபற்றி நிறைய எழுதிவிட்டேன்.. கோயிலில் இருந்து வெளியே வந்து தேரை தாண்டி இடது பக்கம் திரும்பி மூன்று நிமிடம் நடந்தால் பார்த்தசாரதி விலாஸ்.. இதுவும் மண்டப கட்டிடம் என்றாலும் இடத்தில் பெரியது, நிறைய பேர் சௌகரியமாக அமர்ந்து சாப்பிடலாம்.. பெரிய நெய் ரோஸ்ட் மிக பிரசித்தி.. முறுகலாக தோசையை எடுத்து ஒரு வெண்ணை கட்டியை அதன் மீது வைத்து கொடுப்பார்கள். சாம்பாரும் , கெட்டி சட்னியும், தேவர்களுக்கெல்லாம் பாற்கடலை கடைந்தபோது ஏதோ கிடைத்ததே , கரெக்ட்.. அமிர்தம் தான்.. உள்ளூர்க்காரர்கள் இதையெல்லாம் சாப்பிட்டுவிட்டு காபிக்கு ஆசைப்பட மாட்டார்கள். பிறகு, காபிக்கு காந்தி சிலை அருகே உள்ள முரளி கடைக்கு போய்க்கொள்ளலாம்.கல்லாப்பெட்டி அருகே உள்ள ப்ரிட்ஜில் ஒரு பாட்டிலில் ஐஸ் மோர் வைத்திருப்பார்கள். அதை ஒரு மடக் குடித்துவிட்டு சிறிது நேரம் பேசாமல் இருப்பார்கள். ஏன் தெரியுமா? பேரின்பத்தை சிறிது நேரம் அப்படியே அனுபவிக்க வேண்டுமாம்.

ஒரு கால கட்டத்தில் நல்ல சாப்பாடு என்றால் மாயவரம் லாட்ஜிற்கு தான் எல்லோரும் படையெடுப்பார்கள். அந்த வற்றல் குழம்புக்கு ஈடு எங்கும் கிடையாது. இதை மூடி பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது நல்ல பசி , ஒரு மத்தியான வேளை என்றால் ஆண்டாள் தெருவிற்கு போய் மதுரா லாட்ஜ் என்று கேட்டால் போதும், அந்த கூட்டத்தில் உங்களை ஐக்கியப்படுத்திவிடுவார்கள். வாழை இலை போட்டு வரிசையாக அமர்த்தி, பொல பொலவென சுட சுட சாதம், ஒரு கூட்டு, ஒரு பொறியல், சாம்பார், ரசம், மோர், குறிப்பாக ஊறுகாய் உள்ளிட்ட சாப்பாட்டை சாப்பிட்டு விட்டால் ஒரு தலைகாணியும் பாயும் கண்டிப்பாக தேவை. இதை போலவே இப்ராஹிம் பார்க் அருகே உள்ள ஆதிகுடி, ஜங்க்ஷன் சங்கர் கபே போன்ற இடங்களிலும் நாங்கள் தஞ்சம் புகுவதுண்டு. ஒரு காலத்தில் நந்தி கோவில் தெருவில் ஆர் டி சி என்றொரு ஹோட்டலிலும் நல்ல டிபன் அயிட்டங்கள் கிடைத்து வந்தன. பிற்காலங்களில் அபிராமி, வசந்தபவன், காஞ்சனா, சங்கீத், குரு என்றெல்லாம் சீருடை அணிந்த சர்வர்கள் குளு குளு ஏசியுடன் உயர்தர என்று போட்டுக்கொண்டாலும் உள் நாக்கு வரை சுவை கொண்ட எங்களை போன்றவர்கள் இப்பிறவிப்பயனை இப்படித்தான் அடைந்து கொண்டிருக்கிறோம்.

Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s